Sunday, March 14, 2010

1+0=10

பூஜ்யத்தை போலிருக்கும்
சக்கரத்தருகே
நீ எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு
என் மதிப்பெண்கள் 10.

பித்தனைப்போல நான்


வெய்யிலின்
பிள்ளைகளென
மஞ்சள் ஆட்டோக்கள்
தகதகத்து நிற்கின்றன
சிக்னல்களில்.
பயணிகள் நடைபாதையை
ஒற்றையடிப்பாதைஎன
ஆர்வம் கொண்டு
உற்சாகமாய் முனுமுணுத்துப்போகிற
பித்தனைப்போல
நான் உன்
குளிர் புன்னகையை
மனசுக்குள் நினைத்தபடி
என் பிரிய ipod-ஐ
இயக்கத்துவங்குகிறேன்.
சூரியக்கதிர்களின் வாஞ்சையில்
மேம்பாலங்களில் அமர்ந்திருக்கும்
காகங்களின் ஜீவன் பார்த்தபடி
என் மதியம்
மெல்ல நகர்கிறது.

Monday, March 8, 2010

உள்ளபடியே நான் .........


அர்த்தங்களை
ஒவ்வொன்றாய்
படித்துப் பார்க்க ஆசைதான் .
நான் என்ன செய்வேன்
உன் மௌனத்தின்
விரல் நுனியைப் பிடிக்கும் பொழுதே
வெடித்து சிதறுகிறேன்
உள்ளபடியே நான் ...

கவின்பாட்டி


பாட்டியின்
சுருக்குப்பைக்குள்
நிறைய ஹைகூக்கள்.

April Fool


ஏப்ரல் ஒன்றில்
தற்கொலை செய்து கொள்வதில்
ஒரு வசதியிருக்கிறது.
நண்பர்கள் உறவினர்கள்
தெரிந்தவர்களென எல்லோருக்கும்
நிதானமாய்
ஒரு போன் போட்டு
சொல்லிவிட்டுப் போகலாம்.

பெய்தாலும் பெய்யும் மழைபோல


எதிர்படும்
சிறுவர்கள்
பதறியோட
குடைமரம் கடந்து
நீள்கிறது
நம் ஒற்றையடிப்பாதை.
பட்டாம்பூச்சிக்கும்
தேன்சிட்டுக்கும் கூட
மணியடித்து
விலக்கச்சொல்கிறாய்.
தூரத்து தென்னைகளும்
குடிசையில் காத்திருக்கும்
உன் பாட்டியும்
நமக்காக சொல்லவிருக்கிற
கதைகளில்
நான் வேகம் கூட்டுகிறேன்.
பெய்தாலும் பெய்யும்
மழைபோல
நீ தரவிருக்கிற முத்தம்
வழியெங்கும்
குளிர்கிறது.