Friday, June 4, 2010

மழையோடு போய்

தலைவலியை
காணாமல் போகச்செய்து
திவ்யமாய்ப் பெய்கிறது
மாலை நான்கிலொரு மழை.
பல்லடம் வரை
சென்றுவர நினைத்தது
எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று.
its raining here என்றொரு குறுந்தகவலை
அவளுக்கனுப்பிவிட்டு
மழை பார்த்தேன்.
சில துளிகள்
மேனியில் பட்டு சிலிர்த்தது.
கண்டக்டரின் விசில் சத்தம்
குளுமையாய் இருந்தது.
ரஹ்மானின் பாடலொன்று
செல்லமாய் அதிர்ந்துகொண்டிருந்தது.
மழையின் மகிழ்ச்சி
பேருந்து முழுக்க பரவி
பள்ளிவிட்டுத்திரும்பிய
குட்டிப்பையன்கள் விழிகளை
அகல விரித்துப் பேசினார்கள்.
அருகில் இருந்தவர்
வெகு இயல்பாய்
எங்கே போறீங்க
என்று கேட்டார்.
சில பெயர்கள்
மனசுக்குள் மந்திரம் போல
மிதந்தெழும்பின.
மணி கல்யாணம்
எவ்வளவு அழகாக நடந்திருக்கிறது!
மழையில் சுழலும்
மின்காற்றாடி பற்றி
அதிதிக்கு சொல்ல வேண்டும்.
வந்துவிட்டது என் நிறுத்தம்.
குளிர் சுவாசத்தோடு
இறங்கியவனை வரவேற்றார்கள்
பேருந்து நிறுத்தம் முழுக்க இருந்தவர்கள்
பூப்போட்ட பிளாஸ்டிக் குவளைகளில்
தேநீர் அருந்தியபடி.

Thursday, June 3, 2010

வெந்து தணிந்தது

வெந்து தணிந்தது
என் வீடு
மின்வெட்டு.

Wednesday, June 2, 2010

சொல்வனம்


பற்றியெரிகிறது
என் சொல்வனம் .
அர்த்த ஜ்வாலைகளின் பொன்னிறம்
ஒரு கவிதைக்கான மௌனத்தை
கொடுத்துப்போகிறது.
பெருங்காற்றலைகள்
சிறுபறவைகள் குறித்த
கவலையின்றிச் சுழல்கின்றன.
உன் ஞாபகமாய் வைத்திருக்கும்
ஒன்றிரண்டு சொற்களை மட்டும்
பைக்குள் போட்டுக்கொண்டு
தப்பிக்க முயல்கிறேன்
வலிகளின் ஆதி வழித்தடத்தில்.
நீ புரிந்துகொள்ளாத
இந்த உயிர்
இப்போது அழகாய்த்தெரிகிறது
எனக்கே.

Tuesday, June 1, 2010

போர்க்களம்


குருதி கசிய
என் தளவாடங்களை விட்டோடுகிறேன்
களத்தின் போர்தான்
போர்க்களமென யாருமெனக்கு
நினைவூட்ட விரும்பவில்லை.
நீ விரும்பித்தந்துவிட்ட
மௌனத்தின் ஒருபகுதி
தீப்பிடித்தேரிகிறதென
நான் கூச்சலிட முனையவுமில்லை.
வழி நெடுக என் குருதி
வலியோடு எரிய
மெல்ல நகர்கிறது
நன் விரும்பிச்சென்ற போர்க்களமும்
சிலபோர்நுட்பங்களும்.