Wednesday, May 19, 2010

மாமழை போற்றுதும்


உருகிக் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது
இம் மாமழையில்
நீ தந்த வருத்தங்கள் ..
உணர்வுகளில் குளிர் ஏறி மருகுகிறது
உன் அருகாமை வேண்டி..

உன் கதைகள்
உன் வியப்புகள்
நீ தந்த கூழாங்கல்
உன் பிரிய ஜன்னலோரம்
குறுந்தகவல் ஸ்மைலிக்கள்
எல்லாம்
சடசடக்கும் மழை சொட்டுகளாகி
விழுந்து புரள்கின்றன
மேனியிலும் மனத்திலும் ...

மழை சாட்சியாய் கேட்கிறேன்
தேநீர் தயாரிக்க நான் தயார்
என் பிழைகளை மன்னிக்க நீ தயாரா?

Saturday, May 15, 2010

குளிரூட்டி


கூட்ட நெரிசல் மிகுந்த
பேருந்துகளால்
அரசாங்கத்தை
திட்டிதீர்த்து கொண்டிருந்தேன்.
இளம் காற்று வீசும்
ஒரு தமிழ் பாடலை கேட்டபடி
ஏ சி பேருந்தில்
நானுமொருமுறை
பயனிக்கும்வரை.

Tuesday, May 11, 2010

அதிதேவதை

அகல விழிக்கும்
சாமிக்கு பயப்படாமல்
கோவில் சுவர்களின்
எதிரொலி உந்த
தம்பி பெயரை
உரக்கக் கத்திப் பார்க்கிற சிறுமி
எனக்கு அதிதேவதை.

பொழியும் மழையில்
சைக்கிள் பயணம்
வேகம் குறைவாய்...

Sunday, May 9, 2010

பூனைகள் அலையும் இரவு


நடுநிசியில் உன்னை
எழுதத் துடிக்கின்றன விரல்கள்
வெள்ளைப் பூனையின் அலைவுகளென
அறையில் ஒளிரும்
ஒரு குட்டி மஞ்சள் ஒளியோடு
முரண்டுபிடித்து விளையாடும்
என் நினைவுகளின்
அச்சிறு கணங்களிலும்
வானத்தின் நீலம்
உன் கன்னத்தில் இருப்பதாய்
ஊகிக்க முடிகிறது.
வரிசையாய் அடுக்கிவைத்திருக்கும் என்
டெனிம் பெர்ப்யூம் டப்பாக்களின் மீது
உன் பெயரை
உரக்கக் கத்தியபடி
ட்ரம்ஸ் இசைக்கலாம்
போலிருக்கிறது.

Friday, May 7, 2010

நவீன தலைவனின்
மடலேறுதல்
டயலர் டியூன் பாடல்.