Friday, April 30, 2010

நீரற்ற குளம்
தவளையின் கண்களில்
நகரும் மேகங்கள்
பழுப்பு வெயிலூடே
மழை பொழிவதை
பார்த்துச்செல்கிறேன்
என் ஏகாந்த ஜன்னலோரம்
அடித்த ஹாரனில்
விலகிப் போயிற்று
ஒரு கவிதை.
மழை போலவே தான்
இருக்கிறது
மழை பற்றிய தகவலும்.
இசைப்பிரவாகத்திற்கு
முந்தைய
இசைக்கலைஞனின்
வாத்தியப் பயிற்சிக் குறிப்புகளாய்
துவங்கிற்று
பெருமழைக்கு முந்தைய
சிறுதூறல்.
பிரவாகமெடுக்கும்
கீபோர்டின் இசையைப்போல
ஒரு கவிதை
எழுதவேண்டும் போலிருக்கிறது
ஒவ்வொருமுறையும்
ஒவ்வொரு கலரில்
டீ போட்டுத்தரும்
எங்கள் தெரு
டீக்கடை மாஸ்டருக்கு
வால்ட் டிஸ்னி என்று
பெயர் வைத்திருக்கிறேன்.
ப்ரவீணாக்குட்டியிடம்
கதையொன்று
சொல்லச்சொல்லிக் கேட்டேன்.
எதிர்கேள்விகள் கேட்கக்கூடாதென்ற
நிபந்தனையோடு
குள்ள மனிதர்கள் பற்றி
அவள் சொன்ன
கதையில் வந்த
ராட்சசனை விடவும்
பெரியது
அவளிடம் கதைகேட்ட
என் மகிழ்ச்சி.
கதையின் நீதி
யாதெனில்
குழந்தைகளிடம் கதை கேட்டால்
பெரியவர்களும் குழந்தைகளாகலாம் என்பதுவே

மழைநாள் தனிமை

==

பாதி திறந்த கதவின் வழியே
உள் நுழைகிறது
பெருந்துயரின் தனிமை.

மழை நாள்
மீதம் விட்டுச் சென்றிருக்கிற
வாசல் வானம்
உள் நுழையப்பார்ப்பது தெரியாமல்
வலம் வருகின்றன
சருகு இலைப் படகுகள்.

பொருள் புரியாமல் இருக்கிறது
பெயர் தெரியாத இலையின்
நிழல் பிரதிபலிப்பு.

ஆழ்ந்த மௌனத்தில்
பிறழ்ந்து கிடக்கின்றன
ஒரு ஜோடி செருப்புகள்.

குழந்தைகள் தடதடக்காத
மாடிப்படிக்கட்டுகளின்
ஒளிர் ஈரம்
ஒரு பனிமழையைச் சுமந்திருக்கிறது.

காம்பௌண்ட் சுவற்றில்
சார்த்தி வைதிருக்கிற
உடைந்த கதவின் அழுகை
எனக்குப் புரியாமல் போனால்தான்
அதிசயம்.

சுவடுகள் இல்லாமல்
நினைவுகளில் மட்டுமே
விழுந்து நொறுங்குகின்றன
பனிக்கட்டிகள்.

நந்தியாவட்டையும்
சிவப்புமிளகாயும் போல
இருளும் ஒளியும்
சந்திதுக்கொள்கிற தனிமைப்புள்ளியில்
நிகழ்கிறது
சூன்யாபரூப தியானம்.

ஒரு சிறுமழைக்குப் பிந்தைய குளிரை
என் சிகரெட் லைட்டர் வெப்பதால்
என்ன செய்து விடமுடியும்
அதிகபட்சம்.....?

இதற்கிடையில்
உள்ளின் மூலையில்
எவனோ ஒருவன்
ட்ரம்ஸ் இசைக்க முயன்று
தோற்க்கிறான்.

மழைவிட்ட பிறகும்
துணிக்கொடியில் தவமிருக்கிற
மழைத்துளிகளின்
ஆனந்தநடனம்
எப்போது வேண்டுமானாலும்
துவங்கலாம்......

பின்புறக்கதவின்
மிக்கிமௌஸ் தவிர
வேறு யார் வரப்போகிறார்கள்
இந்த உலகதிற்குள்...
...................
...................

Thursday, April 29, 2010

மௌனம் என்னும்..

இவ்வளவு அடர்த்தியானதா இந்த மௌனம் ?

வனாந்தரங்களிளிருந்து சுள்ளிகள் பொறுக்கி
சாவகாசமாய் என் வலிகளை
சுட்டு பொசுக்கி
சுவையூறும் காரம் சேர்த்து தின்னும்
உருவமில்லா உருவகமொன்று
உள்ளுக்குள் உருண்டு தணிகிறது.

என் கவிதைகள் மேலிருந்த நம்பிக்கையை
ஒட்டுமொத்தமாய் தகர்த்துவிட்டு
ஒன்றும் அறியாதது போல
நகர்ந்து போகிறது
மௌனத்தின் ஓரிழை.

பைத்தியகாரதனங்களின் உச்சத்தில்
ஞானம் பிறக்கிறது
எப்படி இப்படி?

இது மிகவும் அற்ப்புதமானதாயிருக்கிறது
பரிமாறிக்கொண்ட எவற்றையும் விட.

இது மிகவும் அழகாயிருக்கிறது
மனிதர்களின் விஷேஷ சுபாவங்களையும்
கேட்கப்பட்ட கதைகளையும் விட.

யாருக்கும் என்னை
பிடிக்காமல் போகிற கணங்களிலும்
என்னால் புன்னகைக்கமுடிகிற
சுகானுபவம் வாய்த்ததும் இதனால்தான்.

மௌனம்..
எப்படி பகிர்வேன் இதை?

பகிர்தலின் சாத்தியம் அறியாமலா
என் புளு ரேனால்ட்ஸ் இயங்கிக்கொண்டிருக்கிறது?

மேல்விழும் நீர்த்துளியின்
மௌனத்தின் சதவிகிதத்தை
உணரமுடிகிறது
உணர்த்தமுடியுமா தெரியவில்லை.

இது யாருடையது?
என்னுடையதா?
என் அருகாமையில் மகிழ்ச்சி கொள்ளாத அவளுடயதா?
என் பணப்பை குறித்து கேலி செய்த அவனுடையதா?
என் நம்பிக்கைகளின் ஆஸ்த்தியா?
என் தேவதைகளின் ஆசிர்வாதமா?
என் அழுக்குகளின் கூடையா?
இன்னும் எழுதப்படாத என் கவிதைகளின் கருப்பொருளா?
இன்னும் பார்க்கபடாத
இடங்களின்/ மனிதர்களின்
அகவெளியின் பிரதிபிம்பமா?

சுட்டெரிக்கிறது ஒரு நொடி
குளிரடிக்கிறது மறு நொடி.

இதுவேறு தனிமை
இதுவேறு வேதனை
இதுவேறு வெறுமை
இதுவேறு அழுகை
இதுவேறு முத்தம்
இதுவேறு உவகை
இதுவேறு சிலிர்ப்பு
இதுவேறு இது.

மாயங்களற்ற சொற்களில்
நீளும் என் வரிகள்
ஒருபுறம்
அழியத்துவங்குவது குறித்து எனக்கு
கவலை ஏதுமில்லை.

இவ்வளவு அடர்த்தியானதா இந்த மௌனம்?


Sunday, April 25, 2010

நீரில் தெரியும் வானம்
கடந்துபோகும் மேகங்கள்
மான்கள் நீர்பருகும் குளம்
இலையுதிர்கால பறவைகள்
கூடடையும்
சற்று தாமதமாய்.

Wednesday, April 21, 2010

அசையாமல் மரங்கள்
எறும்புகள் கூடடையும்
இலையுதிர்காலம்.
மெல்ல பறக்கும்
இலையுதிர்கால பறவைகள்
சிறகுகளை சுமந்தலையும் எறும்புகள்
இலைகளற்ற மரத்தின்
நிழலில் துள்ளும்
குட்டி அணில்கள் .