Friday, April 30, 2010

மழைநாள் தனிமை

==

பாதி திறந்த கதவின் வழியே
உள் நுழைகிறது
பெருந்துயரின் தனிமை.

மழை நாள்
மீதம் விட்டுச் சென்றிருக்கிற
வாசல் வானம்
உள் நுழையப்பார்ப்பது தெரியாமல்
வலம் வருகின்றன
சருகு இலைப் படகுகள்.

பொருள் புரியாமல் இருக்கிறது
பெயர் தெரியாத இலையின்
நிழல் பிரதிபலிப்பு.

ஆழ்ந்த மௌனத்தில்
பிறழ்ந்து கிடக்கின்றன
ஒரு ஜோடி செருப்புகள்.

குழந்தைகள் தடதடக்காத
மாடிப்படிக்கட்டுகளின்
ஒளிர் ஈரம்
ஒரு பனிமழையைச் சுமந்திருக்கிறது.

காம்பௌண்ட் சுவற்றில்
சார்த்தி வைதிருக்கிற
உடைந்த கதவின் அழுகை
எனக்குப் புரியாமல் போனால்தான்
அதிசயம்.

சுவடுகள் இல்லாமல்
நினைவுகளில் மட்டுமே
விழுந்து நொறுங்குகின்றன
பனிக்கட்டிகள்.

நந்தியாவட்டையும்
சிவப்புமிளகாயும் போல
இருளும் ஒளியும்
சந்திதுக்கொள்கிற தனிமைப்புள்ளியில்
நிகழ்கிறது
சூன்யாபரூப தியானம்.

ஒரு சிறுமழைக்குப் பிந்தைய குளிரை
என் சிகரெட் லைட்டர் வெப்பதால்
என்ன செய்து விடமுடியும்
அதிகபட்சம்.....?

இதற்கிடையில்
உள்ளின் மூலையில்
எவனோ ஒருவன்
ட்ரம்ஸ் இசைக்க முயன்று
தோற்க்கிறான்.

மழைவிட்ட பிறகும்
துணிக்கொடியில் தவமிருக்கிற
மழைத்துளிகளின்
ஆனந்தநடனம்
எப்போது வேண்டுமானாலும்
துவங்கலாம்......

பின்புறக்கதவின்
மிக்கிமௌஸ் தவிர
வேறு யார் வரப்போகிறார்கள்
இந்த உலகதிற்குள்...
...................
...................

1 comment: